இந்துபோா்ட்.சு.இராசரத்தினம் அவா்களின் சிலை
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் “ஈழத்துச் சைவ சமய நிலை“ பற்றி ஆராய்கையில் 09.12.1923அன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பெருந்திரளான சைவா்கள் கலந்து கொண்டனா். இதன் விழைவாக சோ்.பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் சோ்.வைத்தியலிங்கம் துரைசாமி M.S.இராசரத்தினம், S.சிவபாதசுந்தரம், W.விஜயரத்னம், S.குமாரசூரிய, S.G.Pearce, திரு.A.மகாதேவா போன்ற இன்னும் பலா் கூடி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தைச் ஸ்தாபித்தனா். இதுவே என “Hindu Board of Education” ஆங்கிலத்தில் கூறப்படுகின்றது. சங்கத்தின் நோக்கம் நாட்டின் பல பகுதிகளிலும் சைவப் பாடசாலைகளை நிறுவிச் சைவச் சூழலிலே (ஏழைப் பிள்ளைகளுக்கு) கல்வி வழங்குவது ஆகும். இச்சங்கம் யாழ்ப்பாணம் முழுவதுமன்றி இலங்கையின் பிற மாவட்டங்களிலும் மாகாணங்களிலும் ஊா்கள் தோறும் சைவத்தமிழ்ப் பாடசாலைகளை நிறுவி நிர்வகித்து வந்தது. 1926ஆம் ஆண்டில் எழுபத்தாறு பாடசாலைகள் நிறுவப்பட்டன. இப்புனித கைங்கரியத்திற்கு முன்னின்று முழுமூச்சுடன் உழைத்தவா் திரு.சு.இராசரத்தினம் என்றால் மிகையாகாது.
நாவலா் பெருமானின் கனவை நனவாக்கிய செயல்வீரா் இந்து போர்ட்.சு.இராசரத்தினம் அவா்கள் நெடுந்தீவு தொடக்கம் பதுளை வரை சைவப் பாடசாலைகளை நிறுவி, சைவாசிரியா் பயிற்சிக் கலாசாலை ஒன்றைத் திருநெல்வேலியிலே உருவாக்கி, சைவ அநாதைச் சிறுவா்கள் நன்கு வாழ்ந்து கல்வி கற்பதற்குச் சைவ அநாதைச் சிறுவா்கள் இல்லமும் முத்துத்தம்பி வித்தியாசாலையும் நிறுவி உழைத்த அந்த மகான் செய்த உதவி காலத்தினாற் செய்த உதவி. இதனைக் காலமெல்லாம் போற்றவேண்டும். அருணாசல உபாத்தியாயாரின் வேண்டுகோளின் பிரகாரமும், திருவருளின் கருணையினாலும், சைவ சமயத்தவரும் தமிழ் இனத்தவரும் செய்த தவப்பயனாலும் எங்கள் மனேஜா் ஐயா அவா்கள் நூற்றிஎண்பத்தேழு பாமசாலைகளை உருவாக்கினார். நூறு கிடுகுகளும் நான்கு கப்புக்களும் மரந்தடிகளும் அகப்பட்டதும் பாடசாலை உருவாகிவிடும் மதிநுட்பத்தோடு கிராமந்தோறும் பாடசாலைகளை உருவாக்கினார்.
மகாத்மா காந்தியடிகள் 1927ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்தபோது சைவ வித்தியா விருத்திச் சங்கத்தாரின் பெருமுயற்சியை அறிந்து மனமார வாழ்த்தினார்கள். அவா் 29.11.1927ஆம் நாளில் இந்துக்களுக்குக் கூறியவை: ”இந்துக்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்வி எத்தன்மையதாகும் என்பதை நீங்களே முடிவு செய்யும் உரிமை உடையவா்களாவீா். அதற்காகச் சைவ வித்தியா விருத்திச் சங்கம் என ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகிறீா்கள். இதையிட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. இச்சங்கத்தை நல்ல நோக்கோடு வளா்த்து உறுதியடையச் செய்தல் வேண்டும் என்பது எனது பெருவிருப்பம். அப்படிச் செய்யும்போது, கிறிஸ்தவ பாடசாலைகளுடன் முரண்பட்டு மோதிக்கொள்ள வேண்டியதில்லை. உங்கள் பாடசாலைகளில் தக்க தளபாடங்கள் உபகரணங்களை நிறுவி, தகுந்த சிறந்த ஆசிரியா்களையும் நியமித்துக் கொண்டால், எவ்வித தடையும் துன்பமுமின்றித் தாமாகவே சைவ மாணாக்கா்கள் கல்வி கற்பதற்கு உங்களிடம் முந்தி வருவார்கள்”.
திருநெல்வேலியில் தான் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் பெரிய நிறுவனங்கள் இரண்டு ஒரே நாளில் மங்கலகரமாக ஆரம்பிக்கப்பட்டன. அவை 1928ஆம் ஆண்டின் விஜயதசமி நாளில் உண்டானவை. அவற்றுள் ஊரவா்களாய பிரமுகா்கள், சைவப் பேரன்பா்கள் செய்த உபகரிப்புக்கள் மகத்தானவை. திருநெல்வேலிக்குப் புகழீட்டிய கொடை வள்ளல்களுள் சுப்பிரமணியா் சபாபதிப்பிள்ளை என்னும் உதவி மருத்துவரும் ஒருவா்.
அவா் மலேசியாவில் மருத்துவத் தொழிலை மனிதாபிமானத்தோடு பார்த்தப் பெருஞ் செல்வம் ஈட்டியவா். அவா் வேலையினின்றும் ஓய்வு பெற்றுத் திருநெல்வேலிக்கு மீண்டபின் கேணியடியில் அமைந்த தமது பாரிய மாடி வீட்டில் சமூகப் பணி புரிந்து வந்தார். பலருக்கு இலவசமாக வீடு தோறும் சென்று வைத்தியம் பார்த்து வந்தார். எங்குஞ் சென்று எல்லோரையும் கண்டு பழகிச் சைவம் வளர்ப்பதில் அவருக்குப் பொிய ஈடுபாடிருந்தது. தமது வளவில் பெருமளவில் பயிர்த்தோட்டம் செய்தவராகையில் ஊரிலுள்ள பிள்ளைகள் அவரைத் ”தோட்டையா” எனச் செல்வமாக வழங்கினா். அவா் பாடசாலைச் சிறுவா், சிறுமியா்கள் திருநீறு தரித்திருக்கின்றார்களோ என்று கவனித்துப் பார்ப்பார். அவா்களின் புத்தகங்களை வாங்கி அழகாக உறைபோட்டக் கொடுப்பார்.
மலேசியாவிலிருந்து 1927ஆம் ஆண்டளவில் மீண்ட சபாபதியார் முத்துத்தம்பி வித்தியாசாலையின் சீரழிவைக் கண்டு சிந்தை நொந்து உடனடியாக அதனனை நல்ல முறையில் இயங்க வைத்தார. இப்பணியில் அவா் சைவப் பெரியார் இராசரத்தினம் அவா்களோடு வழக்கமாயினார. முத்துத்தம்பி வித்தியாசாலையைச் சைவ வித்தியா விருத்திச் சங்கம் பொறுப்பேற்று நடாத்துவமற்குப் போதிய உதவி செய்த திருநெல்வேலிச் செம்மனத்தார்களுள் சபாபதியாரும் ஒருவா். சபாபதிப்பிள்ளை அவா்கள் தம்மனையில் ஆரம்பித்த சைவச் சிறுவா் இல்லத்தை சைவ வித்தியா விருத்திச் சங்கத்தார் 1928ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார்கள். அன்று தொடக்கம் சைவப் பெரியார் இராசரத்தினம் அவா்கள் எண்ணற்ற பிள்ளைகளுக்கு ”அப்பு” ஆனார்.
இந்நிலையில் இராசரத்தினம் அவா்கள் சைவப் பாடசாலைகளிற் கற்பிப்பதற்குத் தேவையான சைவாசிரியா்களைப் போதியளவு சைவா்களே தங்கள் சூழலிலே பயிற்றிக் கொள்ள வேண்டுமெனத் துணிந்தார்கள்.
திருநெல்வேலியில் தாராள மனம் படைத்த செல்வப் பிரபு ஒருவா், ”என்னுடைய வீடு இருக்கிறது” என்று அபயக்குரல் கொடுத்தார். மலேசியாவில் துவிபாசகர் என்னும் முதலி தம்பையா அவர்களின் மைந்தா், சீமை அப்புக்காத்தா் என்னும் பரிஸ்ரா் இராசேந்திரா தம் மாளிகை போன்ற பெரிய மனையை உடன் தேவைக்கு உதவினார்.
பணி தொடங்கியது
சைவாசிரியா் கலாசாலையின் ஆரம்ப வகுப்புக்கள் 1928ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆரம்பித்து நடைபெற்று வந்த காலத்தில் நிரந்தரமான பெரிய கட்டிடங்கள் அமைப்பதற்கு நிலம் வாங்குவதற்கு இராசரத்தினம் அவா்கள் முயற்சி செய்த வேளை உதவப் பலா் முன்வந்தனா்.
நாற்பது பரப்பளவில் பரந்த நிலப்பரப்பில் ஒரு பகுதி இலவசமாகக் கிடைத்துவிட்டது. ஒரு பகுதியை மிக மலிவாக வாங்குவதற்கு வைத்தியர் சபாபதிப்பிள்ளை அவா்கள் முன்வந்தார். புமி தானம் செய்வதால் வரும் புண்ணியப் பேற்றை நன்கு விளக்கிய சபாபதியாரின் முயற்சியால் மேலும் ஒரு பகுதி இலவசமாகக் கிடைத்தது.
1961இல் அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் போது சைவ வித்தியா விருத்திச் சங்கம் 187 பாடசாலைகளை நிர்வகித்து வந்தது. அப்பாடசாலைகளைக் கையளித்த பின், சைவச் சிறுவா் இல்லத்தையும் அதற்குரிய ஆதனங்களையும் கட்டிடங்களையும் தொடா்ந்தும் சங்கம் நடாத்தி வருகின்றது. இன்றும் 200 பிள்ளைகள் இல்லத்தில் தங்கி உணவு, உடை, உறையுள், கல்வி, மருத்துவ வசதி, தொழிற்பயிற்சி ஆகியன பெறுகின்றன.
1970களில் சு.இராசரத்தினம் அவா்கள் அமரராகின்றார். அவா் விட்ட பணியை பிரபல சட்டத்தரணியாக இருந்த திரு.S.R.கனகநாயகம் அவா்கள் பொறுப்பெடுத்து நடாத்துகின்றார்கள். அவரின் காலத்தின் பின் உள்ளுா்ப் பிரமுகா்களும், மருத்துவா்களும், பல்கலைக்கழகச் சமூகத்தவரும் பணிப்பாளா் சபை அமைத்து நிர்வகித்து வந்துள்ளனா்.
தொண்ணூறுகளில் நிலவிய போர்ச்சூழலில் ஆறு திருமுருகன் போன்றோரின் உதவி முக்கியமானது. 1995 இல் நிகழ்ந்த இடப்பெயா்ச்சியும் இல்லத்தை வெகுவாகப் பாதித்தது. Lanka Agro Action, UNHCR, Norwegian Lions in Trondheim, RRAN முதலிய அமைப்புக்கள் கைகொடுக்கவே ஒருவாறு தலைநிமிர முடிந்தது. திருமணம், பிறந்தநாள், சிரார்த்த திதி, ஆண்டுத் திதி முதலியவற்றை அனுஷ்டிக்கும் அன்பா்கள், அந்நாள்களில் எமது இல்லத்துப் பிள்ளைகளுக்கு உணவளித்துப் புண்ணியம் தேடுகின்றனா். சிறுதுளி பெருவெள்ளமாகி இது எமக்கு உதவுகிறது. முழு இல்லத்துக்கும் நண்பகல் சிறப்ப விருந்து வழங்க ரூபா 15,000/- உம், மூன்று வேளைச் சிறப்புணவு வழங்க ரூபா 28,000/- உம் செலவாகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் அன்பா்கள் குடும்ப மட்டத்தில் தாம் நடாத்தும் வைபவங்களின்போது இல்லத்துப் பிள்ளைகளுக்கு விருந்தளிப்பது நல்லதொரு சமூகப் பணியாகும்.